Wednesday 12 December 2012

பெண்ணியம்..... எனது பார்வையில் -பகுதி 1

பெண்ணியம் என்ற தலைப்பைப்  பார்த்ததும்  எதோ பெரிய அறிவாளி என்று எண்ணி விடாதீர்கள்.. பெண்ணியம் பற்றிப் பேசும் அளவுக்கு எனக்கு அறிவில்லை. இருந்தாலும் என் சிறு அறிவுக்குள் இது பற்றி என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி எழுதலாம் என நினைத்தேன், எனவே என் சொந்த கருத்துக்கள் என்பதால் நண்பர்கள் யாரும் கருத்துப் பிழைகளை சுட்டிக் காட்டலாம். அது என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என நம்புகிறேன்.
பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை, சமத்துவத்தைப் நடைமுறைப்படுத்துவதற்கான சூழ்நிலையை முடுக்கி விடும் ஒரு ஆயுதம் தான் பெண்ணியம் என்ற வாதம்பலர் இந்த உரிமைகளை இன்னொருவரிடமிருந்து (ஆணாதிக்கவாதிகளிடமிருந்து) பெற்றுக்கொள்வது என்று நினைப்பதுண்டு.. இல்லை... உரிமைகள் நாம் பிறக்கும் போதே எம்முடன் பிறந்து விடுகின்றன. அதை சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்குள் மூச்சடக்க அமிழ்த்திவிடுகிறோம்...  ஆண்கள் மட்டுமன்றி பெண்களும்  கூட  இந்த ஆணாதிக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். ”அந்தகாலத்தில் நாங்கள் இப்படியல்ல... என்னமா பேசுதுகள் இந்தக் காலத்துப் பொண்ணுங்க..” என்று அரம்பித்து...  ”பொம்பிளை சிரிச்சாப் போச்சு.. போயிலை (புகையிலை) விரிச்சா போச்சு..”  என்று முடிப்பார்கள். பாமர மக்களிடையே மட்டுமன்றி படித்த புத்தி ஜீவிகளும் கூட தம் பிள்ளைகளை முற்போக்காக வளர்க்கிறோம் என்பார்கள்... ஆனால் எங்கோ ஒரு இடத்தில் `பெண்` என்பதற்கு சமூகத்தால் எதிர்பார்க்கப்படும் வரைவிலக்கணத்தை எதிர்பார்க்கிறவர்களாகத் தான் இருக்கிறார்கள்... 
பெண்மை என்றால் ??...  பெண்ணின் இயல்புகளைப் பெண்மை என்கிறார்கள், அது போலவே ஆணின் இயல்புகளை ஆண்மை என்கிறார்கள். அதில் மென்மை, பெண்களின் பிரதான இயல்பாகவும், வீரம் ஆணின் இயல்பாகவும் சமூகத்தில் எதிபார்க்கப்படுகிறது. உளவியல் ரீதியாக இது சமூகத்தால் திணிக்கப்பட்டுவிடுகிறது. எப்படியெனில் ஒரு குழந்தை பிறந்ததும் அது தன் குடும்பத்தில், அல்லது சூழலில் எப்படி வளர்கிறது என்பதைப் பொறுத்து மென்மைத் தன்மையோ அல்லது வன்மைத்தன்மையோ அதற்குள் புகுந்து கொள்கிறது. இது இயற்கை எனினும் பெண் இந்த இயற்கையைப் பிற்காலத்தில் தன் அறிவுத் திறனுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப வெல்லவேண்டிய கடப்பாடு உடையவளாகிறாள். பெண்மையை மென்மையாகவே இலக்கியங்களில் படைக்கப்பட்டிருப்பதால் அதையே எம் சமூகம் பெண்ணிடம் எதிர்பார்க்கின்றது. அதே வேளை, அதைப் பயன் படுத்தியே அவர்களைப் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் தள்ளிவிடுகிறது.
மென்மையாக உள்ள பெண்கள்  (மென்மையான ஆண்களும் கூட..) பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இதை பெற்றோர், சமூகத்தார் நன்கு அவதானிக்க வேண்டும். இவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதன் கருத்து அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதல்ல. பிரச்சனைகளை எதிர்நோக்கும் போது சோர்ந்து போகாமலும், மன அழுத்தங்களுக்கு உள்ளாகாமலும் பாதுக்காப்பதே. முக்கியமாக அவர்கள் உயிருக்கு பாதுகாப்பு கொடுங்கள். அவர்கள் சமூகத்தின் சவால்களுகூடாகப் பயணிக்கும் போது வெறுமனே சாய்ந்து கொள்ளத் தோள் கொடுத்தால் போதும். மற்றப்படி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தான் இந்த சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்ளவும் கற்றுக்கொடுக்கும்.
மென்மை எப்போதும் அழகானது தான். அது பெண்ணிடம் மட்டுமல்ல ஆணிடமும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவள் நான். இதற்கும் வீரத்துக்கும் முடிச்சுப் போடத் தேவை இல்லை என்பது எனது எண்ணம். பெண்மையின் வீரம் கூட மிகவும் அழகானது தான். அதை எமது ஈழத்தமிழரின் விடுதலைப்போர் வெளிப்படுத்தி நின்றது என்பது யாரும் மறக்க முடியாத உண்மை.  ஆனால் நாம் மென்மை என்ற போர்வையில் பயம், கோழைத்தனம், போன்ற எதிர்மறையான உணர்வுகளையும், வீரம் என்ற போர்வையில் வன்மம், முரட்டுத்தனம் போன்றவற்றையும் திணித்து விடுகிறோம். இவை வரும் போது இயல்பாகவே இவர்கள் மென்மையானவர்களைக்  குறிவைத்துத் தாக்குபவர்களாக மாறி விடுகிறார்கள். அவர்களுக்குள்ள வக்கிர புத்தியால் மென்மையானவர்கள் துடிப்பதை இரசிக்கிறார்கள். இதற்கெல்லாம் விதை சிறு வயதிலேயே பெற்றோர்களாலும் உறவுகளாலும் போடப்படுகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. இதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன்.. பெண் குழந்தை பெரியவர்களிடம் தன் கருத்தை சொல்ல முனையும் போது, அல்லது அதிக குறும்புத்தனம் செய்பவளாக இருக்கும் போது, பெண் பிள்ளையாக அடக்க ஒடுக்கமாக இரு என்று அவளை அடக்குவதும், பாடசாலையில் சக மாணவனிடம் இருந்து அடி வாங்கி அழுது கொண்டு வரும் பையனைப் பார்த்து, நீ ஆண்பிள்ளையா இப்படி அடிவாங்கிக் கொண்டு வாற .. திருப்பி அடிக்க வேண்டியது தானே என உசுப்பி விடும் பெற்றோரும் இருக்கிறார்கள். இன்னும் ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்க.. நினைத்துப்பார்க்கும் போது கொஞ்சம் வினோதமாக்க் கூடத் தோன்றும். ஒரு குழந்தை தவறிக் கீழே விழும் போது பலர் அந்தக் குழந்தையின் அழுகையை நிறுத்த ஓடிப்போய்.. ”இந்த நிலமோ பிள்ளையை அடிச்சது??? அடி...அடி... இனி பிள்ளைக்கு அடிப்பியா? அடிப்பியா?” என்று நிலத்துக்கு உதைந்து அடித்த்தும் பிள்ளை சிரிக்கும்... எமக்குத் தெரியாமலே பிள்ளைக்குள் வன்முறையை வளர்க்கிறோம். இந்தப்பிள்ளை வளர்ந்து வரும் போது தன் சகோதரர்களோடு சண்டையிடும் போதும் தன் சகோதரன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பான். இப்படியே அடுத்தவர் துன்பத்தைக் கண்டு சிரிக்கும் சமுதாயத்தை நாம் உருவாக்கி விடுகின்றோம். இதற்குப் பிறகு இயல்பிலேயே மென்மையாக இருக்கும் பெண்களைப்பற்றி சொல்லவா வேண்டும்...

சரி இந்த நிலையில் இருந்து எப்படி மீள்றது?
இதற்கான பல முயற்சிகள் நடந்து கொண்டிருந்தாலும் சில நல்ல முன்னுதாரணங்களாகத் திகழ்ந்தாலும், பலர் தவறான வழிகாட்டிகளாகவே இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. பெண்களின் கல்வி முன்னேற்றம், தொழில் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கல், கருத்துச்சுதந்திரம், சுய விருப்பு வெறுப்பு போன்ற பல விடயங்களிலே இந்தப் பெண்ணியவாதங்கள் முனைப்புறுத்தப்படுகின்றன. இவை நல்ல விடயங்களாகவே நானும் கருதுகிறேன்.
பிடித்த மணமகனை
தேர்வு செய்ய
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
என்ற தத்துவத்தை உடைத்தெறிந்து
பிடிக்கவில்லை என்றால் நீ புல்லுதான்!
என்று விவாகரத்து செய்ய சுதந்திரம்!
திருமணத்தின் சுதந்திரமாக!
தந்தை சொத்தில் உரிமை!
கணவன் சொத்தில் உரிமை!
மகன் சொத்தில் உரிமை!
இப்படி பெண்களுக்கு
வழங்கியுள்ள சுதந்திரம் ஏராளம்!
-veerakrish கவிதையில் இருந்து சுட்டது.....  http://tamilnanbargal.com/node/45118
இவற்றோடு கல்வி கற்கும் சுதந்திரம், வேலை செய்யும் சுதந்திரம்,கருத்துச் சுதந்திரம் என்று படிப்படியாக பெண் சுதந்திரம் வழங்கப்பட்டு சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டே வருகின்றது.
ஆனாலும் இதையும் மீறி சில சந்தர்ப்பங்களில் முட்டாள்த்தனமான பெண்ணியவாதங்கள் மனதை நெருடுகின்றனவாக இருக்கின்றன. “பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன், மண்ணுக்குள்ளே சில மூடர் அந்த மாதர் அறிவைக் கெடுத்தார்என்று பாடிய பாரதிக்கு, பிற்காலத்தில் பெண்ணியம் என்ற பெயரிலும் கூட பலர் மாதர் அறிவைக் கெடுப்பார்கள் என்று தெரியாதிருந்திருக்குமோ என்னவோ...
அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்கிறீர்களா? அதைத் தொடர்ந்து வரும் பதிவில் சொல்லுகிறேனே...
-என் பார்வை தொடரும்..
-என் பார்வை தொடரும்..இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!