Monday 26 October 2009

என் கௌரவம்

நண்பா....

வெளித்தோற்றம் தனைக்கண்டு
விமர்சிக்க நினைக்கிறாயா?
உடையணியும் தரம் கண்டு
உள்ளத்தை மதிப்பாயா?
நகையணியும் அளவு கொண்டு
நன்மனதைக் கணிப்பாயா?
தலை வாரும் அழகினிலே- என்
தகுதியினைக் காண்பாயா?
வார்த்தைகளின் இடையிடையே
வண்ணத் தமிழ் மறைத்து
ஆங்கிலம் பூசினால் தான்
வாழ்க்கையின் நாகரீகமா?
இத்தனையும் இல்லையென்றால்
இழிந்து பேசுமாம் சமூகம்
எனக்கென்று ஒரு
கௌரவத்தைப் பேணென்கிறாய்
என்னை நீ ஏற்பதற்காய்
என்னை ஏன் மாற்ற வேண்டும்...
என்னை நானாக ஏற்றுக்கொள்
அது தான் என்னுள்ளே விழித்திருக்கும்
அந்த 'நான்' னுக்கு நீயளிக்கும்
கௌரவம்

Thursday 8 October 2009

தெரியுமா?? கேட்டுப்பார்!!!

மலர்களின் சுகந்தம் தெரியுமா 

வண்டுகளைக் கேட்டுப்பார்

மரணத்தின் சுவை தெரியுமா

வன்னிமண்ணைக் கேட்டுப்பார்

மகரந்தங்களின் மயக்கம் தெரியுமா

மலர்களிடம் கேட்டுப்பார்

மனித மாண்பின் பெறுமதி தெரியுமா

தெருவெங்கும் சிதறிக்கிடந்த

சடலங்களைக் கேட்டுப்பார்

விருந்தோம்பலின் மகிழ்ச்சி தெரியுமா

வினயமாய் உரைத்திட்ட

வள்ளுவனைக் கேட்டுப்பார்

வேதனையின் எல்லை தெரியுமா

வட்டுவாகல் வழி கடந்த

உறவுகளைக் கேட்டுப்பார்

விடுதலையின் தாகம் தெரியுமா

முட்கம்பிகளுன் முடங்கிப் போன

முகங்களிலே தேடிப்பார்.....